தைத்திங்கள் – நாணயம் விகடன்

Posted by admin 26/09/2016 0 Comment(s)

 

 

 

 

தமிழை முன்னிறுத்தி வியாபாரம்
எக்கசக்க போட்டிகள் நிறைந்திருக்கும் வியாபாரங்களில் முதன்மையானது ஜவுளி வியாபாரம். சிறுவணிகம், சில்லரை வணிகம், பெருவணிகம் என்று அனைத்திலும் ஆட்சி செய்கிறது. இன்றைய சந்தையில், பிராண்ட் என்பதுதான் ஒரு வியாபரத்திற்கான ஆதார மையம். ஆனால் ஒரு பிராண்ட் என்பதற்கு அதன் தரத்தைவிட பெயர் என்பதுதான் ஆதார மையமாக விளங்குகிறது. அதுவும் மிக பிரபலமான பிராண்ட்களைதான் நல்லது என்று நினைத்து வாங்குகிறோம்.

இன்னொரு விஷயம், ஒரு பிராண்டின் பெயர் என்பது, தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் ஆங்கிலத்திலோ, வேறு புரியாத மொழியிலோ இருந்தால்தான் மதிக்கப்படும். இத்தகைய சூழ்நிலையில், தனது ஜவுளி பிராண்ட்களுக்கு தமிழில் பெயர் வைத்து, தமிழில் வாசகங்களை பொறித்து, தமிழிலேயே செய்முறை விளக்கங்கள் (washing instructions) அளித்து, தமிழை முன்னிறுத்தி வியாபாரத்தை செய்துவருகிறார் இந்த தொழில் முனைவர்.

இவர் வேறுயாருமில்லை ’தைத்திங்கள்’ ஆயத்த ஆடைகளின் நிறுவனர் தேவமணிகண்டன் என்பவர்தான். “தமிழ்” என்றாலே தரமாக இருக்காது என்று எண்ணி வளரும் ஒரு தலைமுறையினரிடம், தனது பிராண்டின் தரத்தை முன்னிறுத்தி, வெற்றி கண்டிருக்கும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தான் இவரது தைத்திங்கள் நிறுவனம்.

 

 

 

 

படிபடியா கத்துக்கிட்டு மேல வந்தேன்

கும்பகோணம் பக்கத்துல குடவாசல்தான் எங்க ஊர். சின்ன வயசுல இருந்தே நான் தொழிலாளிதான். பேப்பர் போடறது, அது, இது-னு சின்ன சின்ன வேலைகள் ஏதாவது செஞ்சுகிட்டே இருப்பேன். 1997-ல 10 ஆவது ஃபெயில் ஆனதும், மேலும் படிக்க விருப்பமில்லை. திருப்பூருக்கு பஸ் ஏறினேன். அங்க ஆரம்பிச்சது என்னோட பயணம். 2000-ல இருந்து, அங்க ஒரு கம்பனில வேலை செஞ்சேன். ஹெல்பரா சேர்ந்து சூப்பர் வைசர், மார்கட்டிங் இன்சார்ஜ், மேனேஜர், ஜெனரல் மேனேஜர்-னு படிபடியா கத்துக்கிட்டு மேல வந்தேன். அதுக்கப்புறம் வேற ஒரு கம்பனில ப்ரமோஷன் மேனேஜரா வேலை செஞ்சேன்.

இதுக்கிடையில, 2007-ல ‘கனிஷ்கா நிட் ஃபேஷன்ஸ்’னு சொந்தமா ஒரு ப்ரடகஷன் யூனிட் ஆரம்பிச்சு எக்ஸ்போர்ட் பன்னிட்டு இருந்தேன். ரெண்டு வருஷம் நல்லா போச்சு. 2009ல டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரொம்ப குறைந்தது. டாலருக்கு ரூ.55 இருந்தது, அப்போ ரூ.38 ஆச்சு. அதனால யூனிட்ட மூடிட்டு துபாய்ல ஒரு கம்பனில வேலைக்கு சேர்ந்தேன். எனக்குள்ள இருந்த தொழில் ஆர்வம் மட்டும் குறையவே இல்ல. 2011-ல மறுபடியும் MK Exports-னு ஆரம்பிச்சேன். ஆனா அப்போ டையிங் ஃபேக்டரி எல்லாம் மூட சொல்லி நீதிமன்றம் தீர்ப்பு வந்ததனால, மறுபடியும் பலத்த அடி. 2012-ல ஒரு இண்டர்நேஷனல் கம்பனில பிராண்ட் டெவலப்பரா வேலைக்கு சேர்ந்தேன். ஆனாலும் சொந்த தொழில் ஆரம்பிக்கனும்னு மனசுல எண்ணம் உறுத்திக்கிட்டே இருந்துச்சு. அப்போதான் லண்டன்ல இருக்குற என்னுடைய நண்பர் வினைக் கார்த்திக் கூட சேர்ந்து ‘ACE Nexus’ங்ர பேர்ல, கம்பனி ட்ரஸ், ஸ்கூல் யூனிபார்ம்னு எக்ஸ்போர்ட் பன்ன ஆரம்பிச்சேன்.

 

ஜெயிலுக்கு போயிட்டு வந்தேன்

மார்கட்டிங்-ல இருந்தப்ப, இந்தியா ஃபுல்லா சுத்தினேன். அப்பதான் மொழிக்கும், வணிகத்துக்கும் இருக்கிற மறைமுகமான தொடர்ப தெறிஞ்சுகிட்டேன். நான் தமிழ் மொழி மேல அதிகம் பற்றுகொண்டவன். 2009-10-ல நடந்த ஈழப்போர்க்கானப் போராட்டத்துல ஜெயிலுக்குப் போயிட்டு வந்தேன். தமிழ் தேசிய அமைப்புலயும் உறுப்பினரா இருக்கேன். ஆங்கில வார்த்தைகள்ல அசிங்க அசிங்கமா அச்சடிச்ச டி-ஷர்டுகளை இளைஞர்கள் போட்டுட்டு சுத்தரத பாத்து கோவமா வந்திச்சு. அப்போதான் இந்த தமிழ் மொழில அச்சடிக்க பட்ட ஆடைகள் குறித்த ஒரு ஐடியா வந்திச்சு. என் தொழில் அனுபவத்தையும் சேமிப்பையும் மட்டும்தான் முதலீடா போட்டேன், அவ்ளோதான். நல்ல எண்ணமும் தரமும் இருந்தா போதுங்க, நம்ம எவ்ளோ பெருசா வேனும்னாலும் சாதிக்கலாம்.

ஃபாரின் பிராண்ட்”-னு எதுவுமே கிடையாது

நீங்க டெல்லில போய் இங்கிலீஷ் பேசி ஒரு பொருளை 50 ரூபாய்க்கு வாங்கரீங்க. அதே பொருளை ஹிந்தி பேசிருந்தா 30 ரூபாய்க்கு வாங்கலாம். இதுதாங்க மொழி வணிகம். இதை நம்புவதற்கு கஷ்டமா இருந்தாலும், இதுதான் உண்மை. சில்லரை வணிகமா இருந்தாலும், பெருவணிகமா இருந்தாலும் இந்த விதி பொருந்தும்.

இன்னைக்கு நீங்க விரும்பி வாங்குகிற டீசல், யு.ஸ் போலோ–னு எந்த ஒரு பிராண்டா இருந்தாலும் அதோட ப்ரொடக்‌ஷன் எல்லாமே திருப்பூர்லதான். ரா மெட்டீரியல்ஸ், டையிங், ஃபேப்ரிகேஷன்–னு எல்லாமே இங்கதான் நடக்கும். ஃபாரின்ல இருந்துக் கொண்டுவந்தது வெறும் பெயர் மட்டும்தான். மத்த எல்லாமே நம்ம மண்ணோடதுதான்.

 

 

தமிழ் மொழி தோக்காது!

இப்படி எல்லாமே நம்முடையதா இருக்கும்போது, பேரும் பணமும் மட்டும் ஏன் அவங்களுக்கு?, இண்டர்நேஷ்னல் கம்பனிகளுக்கும் நான் ப்ராடக்ட்ஸ் சப்ளை பன்னிருக்கேன். குறைஞ்ச விலைல தயாரிச்சத வாங்கி, அவங்க ’பிராண்ட் நேம்’ போட்டு அதிக விலைக்கு விக்குறாங்க. அத தரமானது, விலைக்கு ஏற்றதுனு நம்பி நம்ம மக்களும் வாங்குறாங்க.

அதே குவாலிட்டில தமிழ் மொழில பேர் வெச்சு, குறைஞ்ச விலைக்கு, தரமான துணிகள கொடுக்கனும். இதுதான் என் இலக்கு. நம்ம நாட்டுல நம்ம மொழியில வியாபாரம் செஞ்சா என்ன கொறஞ்சிரப் போகுது?. எனக்கு என் தாய் மொழி மேல பற்று அதிகம். தமிழ் மொழி தோக்கவே தோக்காது நம்பிக்கை இருந்துச்சு. தைரியமா ஆரம்பிச்சேன். இன்னைக்கு தமிழ்நாடு, இந்தியா மட்டுமில்லாம, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஏன் ஈராக்-ல கூட என் பிராண்ட் இருக்கு. பாரிஸ் நகரத்துல இருக்குற எல்லா ஷோரூம்கள்ளையும் “தைத்திங்கள்” பிராண்ட் இருக்கறத நீங்களே போய் பார்க்கலாம்.

என் இலக்கு

பொதுவா நம்ம ஊரு காட்டன் துணிகளில் பாளிஸ்டர், சீனா காட்டன்னு மலிவான உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கலவைகள் இருக்கும். ஆனா தைத்திங்கள் ஆடைகள் எல்லாமே நூறு சதிவிகிதம் பருத்தியில் செய்யப்பட்டது. ஏற்றுமதி செய்யப்படுகிற ஆடைகள் சும்மா அனுப்பிற முடியாது. தேர்ந்தெடுக்கபட்ட துனிகளைதான் அனுப்ப முடியும். அந்தத் தரம் அப்படியே இந்த டி-ஷர்ட்ஸ்ல இருக்கும். இவ்ளோ தரமான இட்ன்ஹ டி-ஷர்ட்ஸை நாம் 300 ரூபாய்க்குதான் விக்கிறேன். இதே வேற பிராண்ட் பேர்ல இருந்திருந்தா கிட்டத்தட்ட 800 ரூபாய் வரை இருக்கும். எனக்கு லாபத்தைவிட இலக்குதான் முக்கியம். இலக்கு மேல கண்ணா இருந்தா லாபம் தன்னால வரும்.

 

என் இலக்கு தரமான பொருட்களை குறைஞ்ச விலைக்கு விக்கனும். இப்போ ஆடை வணிகத்துல வெற்றியும் வளர்ச்சியும் நல்லாவே இருக்கு. இப்போ அடுத்த படிக்கட்டா, தமிழ் வாசகங்களுடன் கூடிய வீட்டு உபயோக பொருட்களை தயாரிச்சு விற்பனை செய்திட்டு இருக்கேன். என்று பதில் கூறிய அவரிடம், தொழில் முனைவோர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பரீங்களா? என்று கேட்டோம். அதற்கு “தொழில் முனைவோர்களே, மொழி வணிகத்தை புரிந்து கொள்ளுங்கள். இலக்கை முன்வைத்து லாபத்தைப் பின் வைய்யுங்கள். நிச்சயம் நீங்களும் ஜெயிக்கலாம்” என்று முடித்தார் மணிகண்டன்.

நீங்களும்…

யாராக இருந்தாலும் ஒரு தொழிலில் இருக்குறார்னா, அவர் கண்டிப்பா பணக்காரரா இருக்கனும். சும்மா எல்லாரும் செய்ய முடியுமா? என்று கேட்ட காலம் போய், இவரைபோல பத்தாம் வகுப்புகூட தாண்டாத, பேப்பர் போடுவதில் ஆரம்பித்து, 14 வயதில் ஒரு பனியன் கம்பனியில் வேலைக்கு சேர்ந்து, பல தோல்விகளைத் தாண்டி, இன்று கண்டங்களை கடந்து பிஸினஸில் கலக்கி வருகிறார். ஆர்வமும், திறமையும் இருந்தால் எந்த துறையிலும் வெற்றி பெறலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம் என்றாலும், இவரைப்போல நீங்களும், உங்கள் மீது நம்பிக்கை வைத்து தொழில் முனைவோர் ஆக முயற்சிக்கலாமே…?

விகடன்: http://www.vikatan.com/personalfinance/article.php?aid=12117

Write a Comment