விரலி மஞ்சள் சமையலறையின் முதற்பொருளாக திகழ்கிறது.மஞ்சள் கிழங்கின் பக்கவாட்டில் விரல்கள் போன்று நீண்டிருக்கும் பகுதியைப் பிரித்து சாண நீரில் வேக வைத்துப் பாடம் செய்வதே கறி மஞ்சள். இது கிருமிகளை அழிக்கும் சக்தியுடையது என்பதால் வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும் இவ்வகை மஞ்சளைப் பயன்படுத்துகின்றனர்.
மருத்துவ பயன்கள்
* மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டினால் தெளிவு
ஏற்படும்.
* வேனல் கட்டி, விரல் சுற்றி, அடிபட்ட வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சளை அரைத்து மாவுடன் கலந்து கிளறிச் சூடாக்கி அதை அடிபட்ட இடங்களில் பற்றுப் போட்டால் குணமாகும்.
* மஞ்சள், வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப்போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப்புண் போன்றவை குணமாகும். மஞ்சளை அரைத்து சிரங்குகள், அடிபட்ட புண்கள் அல்லது கட்டிகள் போன்ற பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் பூச வேண்டும். கட்டிகளாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று நாள்கள் பூசிய பிறகு பழுத்து உடைந்துவிடும். பிறகு அதற்குரிய சிகிச்சையைத் தொடர அவை குணமாகும்.
* உணவாக ஏற்கப்படும் மஞ்சள் தொண்டையிலும், மார்பிலும், இரைப்பையிலும் ஏற்படும் கப அடைப்பை அகற்றி வலியைக் குறைக்கிறது. வாய், நாக்கு, தொண்டை, எகிறு, அண்ணம் முதலிய இடங்களில் ஏற்படும் வேக்காளத்தையும், புண்ணையும் ஆற்றுகிறது. இரைப்பை, குடல் முதலியவைகளுக்குச் சுறுசுறுப்பூட்டி பசி மற்றும் ஜீரண சக்தியை உண்டாக்குகிறது. குடலில் புழு, கிருமி தங்கவிடாமல் வெளியேற்றி விடுகிறது. இத்தனை நல்ல குணமுடையது என்பதால் உணவுப் பொருள்கள் அனைத்திலும் மஞ்சள் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.
* மஞ்சள் தூளைப் பாலில் போட்டுக் காய்ச்சி சாப்பிட வாய்ப்புண், தொண்டை எரிவு, வயிற்றில் எரிவு போன்றவை சரியாகிறது. மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்த வெந்நீரால் வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் ஆறுவதோடு, சளி முறிந்து எளிதில் வெளியாகும்.
* மஞ்சளை அரைத்து கரப்பான், சொரி, சிரங்கால் ஏற்படும் தோல் நிறக்கேட்டிற்கு மேல்பூச்சாக பூச நிவாரணம் கிடைக்கும். மஞ்சளை விழுதாக அரைத்துச் சுடவைத்துப் பற்றுப்போட வீக்கம் குறையும்.
கட்டியாக இருந்தால் அது பழுத்து உடையும். மஞ்சளுடன் அரிசி மாவைச் சேர்த்துக் களியாகக் கிண்டியோ, சாதத்துடன் சேர்த்து அரைத்தோ அதை கட்டிகளின் மேல் போடுவதுண்டு.
* சொரி, சிரங்கு, நமைச்சல் அதிகமிருக்கும்போது மஞ்சளுடன் ஆடாேதாடை இலை சேர்த்துக் கோமூத்திரம் விட்டரைத்துப் பூசுவது நல்லது. சுளுக்கு நரம்புப்பிசகு உள்ள இடங்களில் ஏற்படும் வீக்கத்தையும், வேதனையையும் குறைக்க இத்துடன் சுண்ணாம்பும், பொட்டிலுப்பும் சேர்த்து அரைத்துப் பூசலாம்.
* பச்சையான பசுமஞ்சளின் சாற்றைப் புதிதாக பூச்சி கடிபட்ட இடங்களில் தடவ வீக்கம், தடிப்பு, அரிப்பு, நீர்சொரிதல் போன்ற காணாக்கடி பிரச்னைகள் ஏற்படாது.மஞ்சள் துண்டை ஒரு ஊசியில் குத்தி அனலில் காட்டி எடுத்து அதில் இருந்து வரும் புகையை மூக்கினுள் இழுக்க மார்புச்சளி, இழுப்பு, விக்கல் போன்றவை குறையும். இந்தப் புகை பட்டால் தேள்கடி வலி குறையும்.
* மஞ்சளைத் தூளாக்கிப் புண்ணின்மேல் தூவப் புண் சீக்கிரம் ஆறும். அழுகல் அகன்று பள்ளம் சீக்கிரம் தூர்ந்து வடு மறையும். கல்லீரல், மண்ணீரல் பகுதிகள் மேல் பற்றிடுவது உண்டு.
* மஞ்சள் தூளை வெண்ணெயில் குழப்பிப் பூசிக்கொள்ள பல தோல் நோய்கள் நீங்கும். காமாலை, பாண்டு குஷ்டம், தீராத விரணம், மதுமேகம், பீனசம், கண்டமாலை முதலிய நோய்களில் மிகச்சிறந்த மருந்தாக இது பயன்படுகிறது.
Reviews
There are no reviews yet.