ஓவிய விபரம்: நீர் ஓவிய கலை எண்ணியல் அச்சு ( Digital Print, Matte finishing and Framed )
ஓவியர்: திரு. விஷ்ணு ராம்
கிராமதேவதை தருமதேவி
நீலி/இசக்கி/இயக்கி/யட்சி
காவல் தெய்வமாக தமிழகத்து கிராமப்புற கள்ளிக்காடுகள் நிறைந்த பகுதிகளில் இவளைக் காணமுடிகிறது.மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தாயாக சூலம் ஒரு கையிலும், குழந்தை ஒரு கையுமாக காட்சியளிக்கிறாள்.
முப்பந்தல் எனும் இடத்தில் இசக்கிக்கு கோவில் ஒன்று இருக்கிறது. தன்னை ஏமாற்றியவனை பழிவாங்கிய நீலி, கோபத்துடன் இருக்க அவ்வழி வந்த ஔவையார் அவளை சாந்தப்படுத்தி சிலையில் இருத்தி, வழிபடுவோர்க்கு அருள் செய்யும் தெய்வமென திகழ வேண்டிக்கொண்டாள் என்று ஒரு செய்தியும் உண்டு.
சமண மதத்தின் அம்பிகா என்னும் யட்சியும் இசக்கியம்மனும் ஒரே தோற்றமாகக் கருதப் பெற்றவர்கள். இசக்கியின் கதை நாம் முன்னர் பார்த்த பழையனூர் நீலியை போன்று வரும், சமணரின் தருமதேவி/அம்பிகா யட்சியே இசக்கி என மருவியதாக சொல்வர். அது எப்படியோ இருக்கட்டும் தர்மதேவி கதையை பார்ப்போம் !
சமணத்தில் ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் ஒரு யக்ஷன் யட்சி காவலாய் இருப்பர், நேமிநாதர் என்னும் 22 வது தீர்த்தங்கரரின் காவல் தெய்வம் “அம்பிகா அல்லது தர்மதேவி” ஆவாள். தர்மதேவி…அறங்கள் செய்பவள், கருணை மிக்கவள்.
இவளது தோற்றம் பற்றிய ஒரு சுவாரஸ்ய கதையும் உள்ளது,
சோமசர்மன் என்பான் தன் மனைவி அம்பிகையுடன் (அக்னிலா எனவும் சொல்வதுண்டு)வாழ்ந்து வந்தான், ஒரு முறை வீட்டில் நடந்த சடங்கிற்கு உணவு தயாரித்து வைத்திருந்தாள் அம்பிகை, கணவன் நீராட சென்றுவிடுகிறான் இதற்கிடையே பசியோடு வந்த துறவிக்கு உணவை பிச்சை இட்டுவிடுகிறாள் அம்பிகை, சடங்கிற்கு சமைத்த உணவை இப்படி பிச்சை இட்டதால் வீட்டை விட்டே குழந்தைகளோடு அடித்து துரத்தப் படுகிறாள் !
வாடிய அம்பிகைக்கும் குழந்தைகளுக்கும் தாகம் தீர்க்க நீரூற்று உண்டானதென்றும் பசி தீர்க்க மாமரங்கள் கனிகளை ஈந்தன என்றும் நம்பப்படுகிறது. இவர்களை கணவன் தேடி வருகிறான், அவன் கொலை செய்ய வருகிறான் என எண்ணி உயிர் துறந்து விண்ணுலகம் செல்கிறாள் அம்பிகை.
குழந்தைகள் ப்ரியங்கரன் சுபங்கரன் மீது கொண்ட பாசத்தால் மீண்டும் யட்சியாய் பூமிக்கு வருவதாக கதை செல்கிறது, பின் இவள் கணவனே இவளுக்கு சிங்க வாகனமானான் என்பர்.
அறங்கள் பொழியும் அம்மை என்று புகழப்பெறும் இவளது சிற்பம் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல இடங்களில் காணப்படுகின்றன, கையில் நீலோத்பவ மலரோ மாங்கனியோ கொண்டு இரு மகன்களுடன், ஒரு பணிப்பெண் சிங்க வாகனத்துடன் பொதுவே காணப்படுவாள் !
Reviews
There are no reviews yet.