மரக்குதிரை என்றதும் நம்மில் பலருக்கு குழந்தைப் பருவம் கண்முன்னே வந்துபோகும். நடைவண்டி, மரக்குதிரை, அன்னப்பறவை வண்டி போன்றவையே அக்காலக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள்களாக இருந்தன. ஒரு குழந்தை வளர்ந்துவிட்ட பிறகு இந்த மரச்சாமான்கள் அடுத்த குழந்தைக்காகப் பரண்களில் பத்திரமாக இருக்கும்.
மரக்குதிரைகள் மௌனமாக ஒவ்வொரு தலைமுறையின் கதைகளைப் பேசக்கூடியவை. ஆனால் தற்போது அவை காணாமல் போய்விட்டன. மரக்குதிரையில் அப்படி என்ன அறிவியல் இருந்து விடப்போகிறது என்று நீங்கள் எண்ணலாம். பெரும்பாலும் மா மரத்தில் செய்யப்படும் மரக்குதிரைகளில் சில மருத்துவக் குணங்கள் இருப்பதாக மருத்துவம் சொல்கிறது.
“இரண்டு முதல் நான்கு வயது வரையுள்ள குழந்தைகள் மரக்குதிரையைப் பயன்படுத்துவதால் அவர்களின் உட்செவியில் உள்ள `வெஸ்டிபுலர் இயக்கம்’ (Vestibular movement) திடப்படுகிறது. சமநிலை, அசைவு, ஈர்ப்புவிசை, வேகம் ஆகியவற்றை தோலின் கீழ் உள்ள தசைகளில் பொதிந்துள்ள உணர்வு நரம்புகள் உள்வாங்கிக்கொண்டு புலனுறுப்புகள் வழியாக மூளைக்குத் தெரிவிக்கும் பணியே `வெஸ்டிபுலர் இயக்கம்’. தமிழில் ‘செவி முன்றில்’ என்று குறிப்பிடுவார்கள்.
பயணங்களின்போதும் ராட்டினம் விளையாடுவது மற்றும் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடும்போது தலைசுற்றல், வாந்தி ஏற்பட ‘செவி முன்றில்’ சரியாக இயங்காதது ஒரு காரணம்” என்கிறார் திருநெல்வேலி அரசு சித்தமருத்துவக் கல்லூரி பேராசிரியரும், குழந்தைகள் நல சிறப்பு சித்த மருத்துவருமான ஸ்ரீராம்.
“குழந்தைகள் நல மருத்துவத்தின் தலைமைப்பீடமான `அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்’ (American academy of paediatric) தன் நாட்டில் உள்ள 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மரக்குதிரையைப் (rocking horse) பரிந்துரை செய்கிறது. மேலும், சிறப்புக் குழந்தைகளுக்கும் (Special child ) நோயிலிருந்து விடுபட இது நன்கு உதவிபுரிகிறது என்றும் தெரிவித்துள்ளது. இதேபோல், அட்லாண்டாவில் உள்ள `அசோசியேஷன் ஆஃப் அகடமிக் பிசியாட்ரிஸ்ட்’ (Association of Academic Physiatrists) நடத்திய ஆய்வில் மரக்குதிரையின் நன்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஒரு குதிரையின் தொடர்ச்சியான மற்றும் தாள இயக்கத்தை உருவகப்படுத்தும் ஒரு வகை சிகிச்சை ‘ஹிப்போதெரபி’. பெருமூளை வாதம் எனப்படும் `செரிப்ரல் பால்சி’ (Cerebral palsy) உள்ள குழந்தைகளுக்கு, ஹிப்போதெரபி சிகிச்சை பயனளிக்கும். மேலும் இந்த சிகிச்சை சமநிலை (balance), வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் செயல்பாடு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும்.
தற்போது அதுவே ‘ஹிப்போதெரபி’ என்ற பெயரில் மேலைநாடுகளில் உயிருள்ள குதிரைகளின்மீது சவாரி மேற்கொள்ளப்படுகிறது.
Reviews
There are no reviews yet.